டெல்லி:நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும், சுகாதாரத்துறை அமைச்சகமும் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் இணையத்தில் நேரலை செய்யப்படும்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் நிகழ்வில் ராணுவம், டெல்லி காவல்துறையின் அணிவகுப்பு நடைபெறும். 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரதமர் உரையாற்றுவார். அதன்பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும்.
காலை 9 மணியளவில் மாநில தலைநகரில் முதலமைச்சர் கொடியேற்றுவார். காவல்துறை, பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெறும். அதேபோன்று, மாவட்ட அளவில் அமைச்சர், ஆணையர், மாஜிஸ்திரேட் இவர்களில் யாரேனும் ஒருவரின் தலைமையில் விழா நடைபெறும். மாவட்ட அளவிலான காவல்துறை, என்.சி.சி மாணவர்கள் அணிவகுப்பு என வழக்கம்போல நிகழ்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.