இந்தியா-சீனா எல்லையில் உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்காக 2020-21 நிதியாண்டில் எல்லை பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு (பிஏடிபி) ரூ.784 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், இந்த திட்டத்திற்கு ரூ.770.62 கோடியும், அடுத்தடுத்த நிதியாண்டில் ரூ.825 கோடியும் வழங்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாநில அரசிடமிருந்து பயன்பாட்டு சான்றிதழ் பெற்ற பிறகு நிதி ஒதுக்கப்படுவதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச எல்லையின் நீளம் மற்றும் மக்கள் தொகை போன்ற பல்வேறு அளவுகோல்களைப் பொறுத்து இந்த நிதியாண்டிற்கான பணம் ஏற்கனவே எல்லை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் (எல்லைக் காவல்படையால் அடையாளம் காணப்பட்டவை) உள்கட்டமைப்பை வளர்ப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
3,488 கி.மீ. வரையிலான சீன எல்லையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக சுமார் 78.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிஏடிபி இன் புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 10 விழுக்காடு எல்லை மேம்பாட்டு திட்டத்திற்காகவும், சிறப்பாக செயல்படும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் பயன்படுத்தப்படும்.
சர்வதேச எல்லைக்கு (ஐபி) அருகே அமைந்துள்ள தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் வாழும் மக்களின் சிறப்பு மேம்பாட்டுத் தேவைகளையும் நல்வாழ்வையும் பூர்த்தி செய்வதும், எல்லைப் பகுதிகளுக்கு அத்தியாவசிய உள்கட்டமைப்பை வழங்குவதும் பிஏடிபி இன் முக்கிய நோக்கமாகும்.
அடிப்படை உள்கட்டமைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, கல்வி, விவசாயம் மற்றும் நீர்வளம், நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியனவும் இதில் அடங்கும். சர்வதேச எல்லையிலிருந்து 0-10 கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள், அரை நகர்ப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகள் இந்த திட்டத்தில் அடங்கும்.
இதையும் படிங்க: 'சீனப் பொருள்களை நிராகரிப்போம்'- பொதுமக்களிடம் சி.ஆர்.பி.எஃப். வீரர் வேண்டுகோள்!