இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கால் கடுமையாகp பாதிக்கப்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர். அவ்வாறு சென்ற தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டத்திற்கு கீழ் வராது என்பதால், பல்வேறு மாநிலங்களிலும் குறைந்தபட்ச விவசாய கூலியைவிட இத்திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் குறைவாக இருப்பதாக எஸ்பிஐ வல்லுநர்கள் (SBI experts) தெரிவித்துள்ளனர். எனவே, தற்காலிகமாக ஊதியத்தை உயர்த்துவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதுதவிர பணிபுரியும் இடங்களில் சுத்தமான நீர், முதலுதவி கருவிகள், ஓய்வெடுக்க நிழல் பகுதி ஆகியவற்றை ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளனர். மேலும், வேலை மறுக்கப்படும் தொழிலாளர்களுக்கு மானியம் எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.