தமிழ்நாடு

tamil nadu

புல்வாமா தாக்குதல்: 40 சிஆர்பிஎப் வீரர்கள் மரணமடைந்த அதே நாளில் நினைவிடம் திறப்பு!

By

Published : Feb 14, 2020, 6:03 PM IST

ஜம்மு காஷ்மீர்: புல்வாமா தாக்குதலை நினைவுகூரும் வகையில், தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களுக்காகக் கட்டப்பட்ட நினைவிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

Memorial to 40 CRPF jawans killed in Pulwama attack inaugurated
Memorial to 40 CRPF jawans killed in Pulwama attack inaugurated

கடந்த ஆண்டு இதே நாளில் மத்திய ஆயுதக் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நிகழ்த்தியதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா என்ற இடத்தில் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் இந்தியாவின் பாதுகாப்பின் உறுதித்தன்மையை நிலைகுலையச் செய்தது. ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியான அக்மத் தார் என்பவரின் வெடிகுண்டு நிரப்பிய கார் தான், இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.

இச்சம்பவத்திற்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாலக்கோட்டிலுள்ள பயங்கரவாதிகளின் முகாமைத் தாக்கி, அழித்த போதிலும், 40 வீரர்களின் மரணத்துக்கு ஈடுசெய்ய முடியவில்லை. 40 வீரர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழ்நாட்டு மக்களுக்கும் இச்சம்பவம் மீள முடியாத்துயரை ஏற்படுத்தியிருந்தது.

புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், வீரர்களின் மரணத்தை நினைவுகூரும் வகையில், தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள மத்திய ஆயுத காவல் படை முகாமின் உள்ளே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் 40 வீரர்களின் பெயர்களுடன் கூடிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பேசிய சிஆர்பிஎப் கூடுதல் தலைமை இயக்குநர் சுல்பிகர் ஹசன், வீரர்களின் மரணத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளாதாகக் கூறினார். எதிர்பாராவிதமாக நடந்த இத்தாக்குதலில் நிறைய பாடம் கற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், கூடுதல் பாதுகாப்போடும் எச்சரிக்கை உணர்வோடும் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் கொன்றுவிட்ட நிலையில், அதன் தலைவர் கரி யாசிரும் கடந்த மாதம் கொல்லப்பட்டார்.

இதையும் படிங்க:புல்வாமா தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு நாள் - ராகுல் காந்தி எழுப்பும் முக்கியமான கேள்விகள்!

ABOUT THE AUTHOR

...view details