மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் ஐந்து கட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், தெலங்கானா முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பாஜக - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் தனது கனவை நனவாக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, சந்திரசேகர் ராவ் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திரசேகர் ராவ் - பினராயி விஜயன் சந்திப்பு இந்நிலையில், இது பற்றி பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பில் தேசிய அரசியலைப் பற்றி பேசினோம். சந்திரசேகர் ராவை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு அணிகளும் பெரும்பான்மை பெறாது. இதனால் மத்தியில் ஆட்சி அமைக்க மாநில கட்சிகள் பெரும் பங்களிக்கும். பிரதமர் வேட்பாளரை பற்றி இந்த சந்திப்பில் நாங்கள் எதுவும் பேசவில்லை. இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது" என தெரிவித்தார்.
முன்னதாக, 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டார். அப்போது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.