மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 தொகுதிகளுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
ஆட்சியமைக்க சரத் பவாரிடம் ஆதரவு கோரிய உத்தவ் தாக்கரே!
இரண்டாவது இடத்தில் சிவசேனாவும் மூன்றாவது இடத்தில் தேசியவாத காங்கிரசும் உள்ளன. பாஜகவுடன் கூட்டணி முடிவு எட்டப்படாததால் மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா இன்று விலகியது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சரத் பவாரிடம் ஆதரவு கேட்டதாகத் தெரிகிறது.
உத்தவுக்கு நிபந்தனை விதித்த பவார்
முன்னதாக சரத் பவார், உத்தவ் தாக்கரேவுக்கு நிபந்தனை ஒன்றை விதித்திருந்தார். அந்த நிபந்தனையின்படி, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினால், ஆதரவு குறித்த நிலைப்பாட்டை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார். இதனால் சரத் பவார் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற அரசியல் பரபரப்பு மராத்தி மக்களை தொற்றிக் கொண்டுள்ளது. சிவசேனா ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு மட்டும் போதாது, காங்கிரசின் தயவும் தேவைப்படுகிறது.