இந்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று பத்ம விருதுகளை அறிவிக்கும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. அதாவது, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுவோர் இதற்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த துளசி கௌடா, நாட்டுப்புறச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஆவார். அவர் தன்னுடைய ஊரைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் காடு வளர்ப்பில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுவருபவர்.
கடலோரக் கர்நாடகத்தின் அங்கோலா வட்டத்தில் அவர் ஒருவராகவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ளார். பள்ளிக் கல்வி பயிலாதவராக இருந்தாலும் தாவரங்களைப் பற்றிய அவரது அறிவு ஒப்பிட முடியாதது. வனத் துறையில் அவர் பணியாற்றியபோதே அவர் மரங்களைப் பற்றி அவ்வளவையும் அறிந்துவைத்திருக்கிறார்.
ஹொனல்லி கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் வசித்துவரும் அவர், மிகவும் எளிமையானவர். மரங்கள் மீதான அவரது காதலுக்காகவும் சுற்றுச்சூழல் மீதான அக்கறைக்காகவும் நன்கு அறியப்பட்டவர்.