ஒருவர் உடல் நலம் சரியில்லாமல்போவதை காண்பதற்கே மனம் படபடத்து போகிறது. ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், அந்தக் குடும்பம் படும் இன்னல்களையும் துன்பங்களையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மருத்துவமனையை விட்டால் வீடு என்று நிலை உருவாகும்போது அந்தக் குடும்பம் துன்பத்தில் மட்டுமல்ல மருத்துவச் செலவுகளை தாங்க முடியாமல் கடனில் மூழ்கும் அபாய நிலையும் ஏற்படும்.
பணத்தில் கொழிக்கும் மருந்துகள் அடுத்த பத்து ஆண்டுகளில் உயர்ந்து வரும் சுகாதாரம் தொடர்பான செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியா போன்ற வளரும் நாடுகளை இது பெரிதும் பாதிக்கும். மக்கள் பிரச்னைக்கு தீர்வுகள்தான் என்ன? இதை எப்படி சமாளிப்பது? நோய்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எப்படிப்பட்ட தடுப்பு முறைகளை கையாள வேண்டும்? என்ற விழிப்புணர்வே இல்லாத நிலைதான் தொடர்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலுள்ள 7 விழுக்காடு குடும்பங்கள் மருத்துவச் செலவுகளுக்காக கடன்பட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் 5.5 விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது அறை கூவல்:
1. தற்போது வயது வித்தியாசமின்றி கொடிய நோய்களான மாரடைப்பும் புற்றுநோயும் உலகம் முழுக்க உள்ள மக்களை பெருமளவில் பாதித்துவருகின்றன.
2. உயர் மருத்தவச் சிகிச்சைக்கான செலவினங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளன.
3. மருந்து செலவுகளும் மருத்துவப் பரிசோதனை செலவுகளும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டுவருகின்றன. மருத்துவச் செலவுகளில் 52 விழுக்காடு மருந்துகளுக்காகவே செலவிடப்படுகின்றன.
4. மூத்த குடிமக்கள் தொடர்ந்து மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மருத்துவப் பாதுகாப்பிற்கான செலவும் உயர்ந்துவருகிறது.
நடுத்தர குடும்பத்தினரை பயமுறுத்தும் வகை பிரிட்டனில் பணிபுரிந்த ஒரு இந்திய மருத்துவரிடம் இந்தியாவில் வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைக்கும், பிரிட்டனில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி வினவியபோது, அவரது பதில் வியக்கும் வைக்கும் விதமாக இருந்தது. பிரிட்டனில் ஒரு நோயாளி மருத்துவரிடம் வரும்போது அந்த மருத்தவர் நோயாளியின் நோயைக் கண்டுபிடிக்க வேண்டி தன் கவனம் முழுவதையும் அவருக்கு வழங்க வேண்டிய சிகிச்சை முறைகளிலும், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளிலும் செலுத்தி நோயை முழுமையாக கண்டுபிடித்துவிடுவார்.
ஆனால் இந்தியாவிலுள்ள மருத்துவர் ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்யும்போது, அவரது எண்ணம் முழுக்க நோயாளியின் குடும்ப பொருளாதார நிலையையும், மருத்துவப் பரிசோதனைக்கான செலவுகளை அவர்களால் தாங்க முடியுமா என்பதை பற்றியுமே இருக்கும். அதுபோலவே அந்த நோயாளிக்கு அரசு வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வைக்க முடியுமா என்றும் சிந்திக்கத் தொடங்குவர். இதுவே இரண்டு நாடுகளிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளின் பாரிய வேறுபாடு என அந்த மருத்துவர் தெரிவிக்கிறார்.
இதயத்தை காக்கும் மருத்துவர்கள் இந்தியாவிலுள்ள 70 விழுக்காடு நோயாளிகள் எந்தவித மருத்துவக் காப்பீட்டின் கீழும் வராத நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளையே நாடவேண்டிய நிலையுள்ளது.
மருத்துவக் காப்பீடு
அசாதாரணமாக உயர்ந்து வரும் மருத்துவச் செலவினங்களைச் சமாளிக்க நமக்கு இருக்கும் ஒரே வழி மருத்துவக் காப்பீடு மட்டுமே. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 2.07 கோடி மக்கள் மருத்துவக் காப்பீடு சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர். பயனாளர்கள் 47.20 கோடி மக்கள். இப்பயணாளர்களின் மருத்துவச் செலவுகளை அரசு அல்லது தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றன. மீதம் உள்ள 80 கோடி மக்கள் எந்தவிதமான மருத்துவக் காப்பீடுகளும் இல்லாமலேயே உள்ளனர்.
இவர்களில் பலர் மருத்துவக் காப்பீடு கட்டணத்தை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செலுத்துகின்றனர். இத்தகைய காப்பீடு கட்டணங்களை இவர்கள் தங்கள் சொந்த பணத்தைக் கொண்டு செலுத்தவேண்டியுள்ளதால் அவர்களால் தொடர்ந்து செலுத்த முடிவதில்லை.
தற்போதைய நிலை: (பல்வேறு புள்ளி விவரங்கள் அடிப்படையில்)
- 2000 - 2014 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலங்களில் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் 370 விழுக்காடு உயர்வு.
- அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் எத்தனை நூறு மடங்கு உயரும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
- மருத்துவச் செலவுகளை பல்வேறு நாட்டு அரசுகள் எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்பதை காண்போம்.
- பிரிட்டன் - 83 விழுக்காடு, சீனா - 56 விழுக்காடு, அமெரிக்கா - 48 விழுக்காடு, பிரேசில் - 46 விழுக்காடு, இந்தோனேசியா - 39 விழுக்காடு, இந்தியா - 30 விழுக்காடு.
மற்ற நாடுகளில் மக்களே முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளில் மருத்துவச் செலவுகளை தாங்களே ஏற்றுக்கொள்ளும் சக்தி கொண்ட மக்களின் விழுக்காடு என்ன என்பதையும் காண்போம்.
அமெரிக்கா 13.4 விழுக்காடு , பிரிட்டன் 10 விழுக்காடு, சீனா 13.4 விழுக்காடு ஆகும். ஆனால் இந்தியாவில் 62 விழுக்காடு, இதற்கு காரணம் போதுமான மருத்துவக் காப்பீடு இல்லாததும், அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படாததுமேயாகும்.