கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மேதக் மாவட்டத்தைச் சேர்ந்த கதீட்ரல் தேவாலயத்தில், பல்லாயிரக்கணக்கானோர் குழுமியிருப்பதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. கிறிஸ்துமஸ் மரங்கள், தேவாலயம் முழுவதும் கண்கவர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயத்திற்கு வருகைதரும் அனைவரையும் கவரும் விதத்தில், தேவாலாய நிர்வாகம் இந்த விழாக்காலப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினமான நாளை மாலை, நான்கு மணியளவில் தொடங்கவுள்ள, தேவாலயத்தின் உட்பகுதியில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வில், தென் இந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களும், வெளிநாட்டுப் பயணிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் 5000 முதல் 6000 நபர்கள்வரை சென்று தரிசிக்கவல்ல இந்த கதீட்ரல் தேவாலயத்தில், பக்தர்களின் எண்ணிக்கையைக் கணக்கில்கொண்டு, தேவாலயத்தினுள் சென்று வழிபட முடியாதவர்களுக்கும், வெளியிலிருந்தே நிகழ்வுகளைக் கண்டுகளிக்க வழிவகுக்கும் விதமாக எல்சிடி திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீர் சுத்திகரிப்பு ஆலை ஏற்கனவே தேவாலயத்தில் உள்ளநிலையில், விழாவின்போது ஆட்டோக்கள் மூலமும், தண்ணீர் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.