மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் போராட்டத்தை மேற்கொண்டன. மாநிலங்களவையில் துணைத் தலைவரை அவமதிக்கும்விதமாக அமளியில் ஈடுபட்ட உறுப்பினர் எட்டு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரைப் புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமளி தொடர்பாக உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி ட்விட்டரில் தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவுசெய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "ஜனநாயகத்தின் கோயிலாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தில், அதன் மாண்பு பலமுறை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது மீண்டும் அரங்கேறியுள்ளது வருத்தமளிக்கிறது.
ஆளும் அரசின் நடைமுறை, அதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்வினை - நாடாளுமன்றம், அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆகியவற்றை கேலிக் கூத்தாக மாற்றி அவமானப்படுத்தியுள்ளன" என்றார். புறக்கணிப்பு முடிவை எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட நிலையில் மாநிலங்களவை நடவடிக்கைகள் இன்றுடன் (செப். 23) முடிக்கப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்திய அரசியலில் இருக்கும் குற்றவாளிகள்