உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு நவம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்விரு மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளிலும் பாஜக பலமாக உள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி, சமாஜ்வாதி கட்சி மட்டும் ஒரு இடத்தில் வெற்றபெற வாய்ப்புள்ளது. அந்த இடத்திற்கு, ராம் கோபால் யாதவ்வையே அக்கட்சி நிறுத்தியுள்ளது.
பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் பட்சத்தில், மற்றொரு இடத்தில் எதிர்க்கட்சி வெற்றிப் பெறவாய்ப்புள்ளது. இதற்கிடையே, அந்த இடத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கவுதமை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது வேட்புமனுவை அக்டோபர் 26ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தலித்களின் வாக்குகளை கவரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.