தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் டாக்டர் ஒருவர், மறுமணத்திற்காக தன்னுடைய சுயவிவரத்தை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். இதே வலைதளத்தில், இங்கிலாந்தைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற பெயரில் ஒரு சுயவிவரமும் இருந்துள்ளது. இதனை நம்பிய பெண் மருத்துவர், அந்த நபரோடு பேச்சுக் கொடுத்தார். நாளடைவில் அந்த உறவு திருமணம் வரையிலும் வளர்ந்தது.
இந்நிலையில், அந்த நபர் தங்க நகைகள், பரிசுப் பொருட்கள், மருத்துவத் தொழிலுக்குத் தேவையான சில உபகரணங்கள், விலையுர்ந்த வாட்ச் உள்ளிட்ட பல பொருட்களை அனுப்புவதாக பெண் மருத்துவரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கொரியர் ஊழியர் ஒருவர் பெண் மருத்துவரைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார்.
அப்போது, சில கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் இங்கிலாந்தில் இருந்து வந்திருப்பதாகவும், அதனை வரி செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார். அதற்காக, 12 லட்சத்து 45 ஆயிரம் இரண்டு தவணைகளாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண் மருத்துவர் காவல் துறை உதவியை நாடியுள்ளார்.