தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாய்-சேய் இறப்பு விகிதக் குறைப்பில் இந்தியாவின் பங்கு என்ன? - தமிழ்நாடு தாய்வாழி இறப்பு விகிதம்

நமக்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து கொடுத்திருக்கிறது. ஆகவே கர்ப்ப காலத்தில் மூட நம்பிக்கைகளை கைவிட்டும், தகுந்த விழிப்புணர்வோடு செயல்பட்டும் முறையாக அத்திட்டங்களைப் பயன்படுத்தி தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைத்து ஐநா கூறிய இலக்கை நமது நாடு எட்டுவதற்கு நம்மால் முடிந்த சிறு உதவியை நாம் செய்யலாம்!

Maternal mortality rate in india

By

Published : Nov 15, 2019, 1:49 AM IST

தாய்வழி இறப்பு:

இந்தியாவில் தாய்-சேய் நலனுக்கான சவாலாக வறுமை, கல்வியறிவு, குழந்தை திருமணம் ஆகியவை உள்ளன. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பிரசவத்தில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நிலவும் இந்த அபாயத்துக்கு மேற்கூறிய காரணங்கள்தான் மூலாதாரமாக உள்ளன.

கர்ப்பம், பிரசவம் மற்றும் பிரசவம் நடந்து 42 நாட்களுக்குப் பிறகு கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் ஆகியவற்றினால் தாய்வழி இறப்புகள் ஏற்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மேலும் உலகளவில் 2017ஆம் ஆண்டில் 2.95 லட்சம் பிரசவ இறப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில், இந்தியாவில் மட்டும் 44 ஆயிரம் பெண்கள் கர்ப்பத்தின் போதும், பிரசவத்தின் போதும் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில், 94சதவீத பிரசவ மரணங்கள் ஏழைச் சமூகங்களில் தான் நிகழ்ந்துள்ளன என்பதுதான் நாம் மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. வறுமையும், அதனால் கிடைக்காமல் போன கல்வியறிவும் தான் இதுபோன்ற இறப்புகளுக்கு காரணம் என்று நமக்கு உணர்த்தும் செய்தி.

தாய்வழி இறப்புகள் தடுக்கக்கூடிய ஒன்றுதான் என்றாலும், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, உரிய நேரத்தில் கிடைக்காத மருத்துவ வசதி ஆகியவற்றால், இவை தொடர்ந்துகொண்டே வருகின்றன. தரமான மருத்துவ பராமரிப்பு இல்லாத நாடுகளிலும், தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளிலும் தாய் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

உதாரணமாக 2017ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி, வளரும் நாடுகளின் இறப்பு விகிதம் சராசரியாக 1 லட்சம் பிரசவத்தில் 462 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல வளர்ந்த நாடுகளில் இந்த விகிதம் 11ஆக உள்ளது. குறைந்த வருமானம் உள்ள வளரும் நாடுகளில், 45 பிரசவத்தில் ஒரு மரணம் என்றிருக்கும் விகிதமானது, அதிக வருமானம் கொண்ட வளர்ந்த நாடுகளில் 5,400 பிரசவத்தில் 1 இறப்பு என்று உள்ளது. இதை வைத்துதான் தாய்வழி இறப்புகளுக்கு வருமானம் என்ற காரணி முக்கிய பங்குவகிக்கிறது.

இறப்புகளுக்கான காரணங்கள்:

வறுமை, மருத்துவ சேவைகளின் பற்றாக்குறை, உடல்நலம் குறித்த சரியான புரிதல் இல்லாமை, தொலைதூரங்களிலுள்ள பல்நோக்கு மருத்துவமனைகளின் அணுகல் இல்லாமை, அறிவியலற்ற கலாச்சார நடைமுறைகள், மூடநம்பிக்கைகள் ஆகியவை தாய்வழி இறப்புக்கு வழிவகுக்கின்றன. இதில், 75 விழுக்காடு இறப்புகள் பிரசவத்தின்போது உண்டாகும் அதிக இரத்தப்போக்கினாலும், அதற்குப் பிறகான தொற்றுநோய்களாலும் ஏற்படுகிறது.

மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தமும், பாதுகாப்பற்ற முறைகள் மூலம் கருக்கலைப்பு செய்வதும் இறப்புக்கான காரணங்களாக உள்ளன. மலேரியா காய்ச்சல், நாள்பட்ட நோய்கள், மாரடைப்பு, நீரிழிவு ஆகியவை தாய்மார்களின் உயிரைப் பறிக்கின்றன. இருதய நோய்கள் உள்ள பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, கட்டாயம் மருத்துவ ஆலோசனையை பெற்று தங்களது உடல்நலம் பேண வேண்டும். ஏனெனில், மூன்று தாய்மார்கள் இறந்தால், அதில் ஒரு தாய் மாரடைப்பால் இறக்கிறார்.

உலக அரங்கில் இந்தியாவின் நிலைமை:

முறையான மருத்துவ வசதிகள் இல்லாததால் சில ஆப்பிரிக்க நாடுகளும் தெற்காசிய நாடுகளும் தாய்வழி இறப்பு விகிதங்களை அதிகம் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. இதன் எதிரொலியாக 2030-க்குள் தாய்வழி இறப்பு விகிதத்தை 70ஆக குறைக்க வேண்டும் என்பதே ஐநா சபையின் மிக முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. இதற்காக தாய்-சேய் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு உலக நாடுகளுடன் இணைந்து ஒரு திட்டத்தை தொடங்கியது.

அதன்படி, தாய்வழி இறப்பை ஏற்படுத்தும் மருத்துவசேவை பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து மிக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும், மற்ற காரணிகளையும் தீர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த திட்டத்தில் கூறப்பட்டது. மேலும், தாய்வழி இறப்புகளுக்கு அனைத்து நாடுகளும் தார்மீக பொறுப்பேற்று அதனை குறைப்பதற்கு முன் வரவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

செயலில் இறங்கிய இந்தியா:

இதனடிப்படையில், செயல்பட்டதால் இந்தியாவில் தாய்வழி இறப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பது ஒரு சாதகமான விளைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இந்த இறப்புகளை 77 விழுக்காடு இந்தியா குறைத்ததற்காக உலக சுகாதார அமைப்பு இந்தியாவைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆம், 1990ஆம் ஆண்டில், இந்தியாவில் சராசரியாக ஒரு மில்லியன் பிறப்புகளுக்கு 556ஆக இறப்பு விகிதம் இருந்தது. ஆனால், 2017 வாக்கில், இந்த எண்ணிக்கையானது 130ஆக குறைக்கப்பட்டது. மத்திய அரசு தாய்-சேய் பராமரிப்பு சேவைகளில் அதீத கவனத்தை செலுத்தி அதனை மேம்படுத்தியதே இதற்கு மிக முக்கிய காரணமாகும்.

2005ஆம் ஆண்டில், மருத்துவமனையில் 18 விழுக்காடாக இருந்த குழந்தை பிறப்பு விகிதத்தை, 2016ஆம் ஆண்டுக்குள் 52 விழுக்காடாக உயர்த்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகக் கடுமையாக உழைத்தன. அதன் ஒருபகுதியாக, மத்திய அரசால் 'தாய்-குழந்தை பாதுகாப்புத் திட்டம்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் இலவசமாக பிரசவிக்கப்படுவார்கள், அவர்களுக்கான போக்குவரத்து செலவு அரசால் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு, செயல்படுத்தவும்பட்டது.

அதேபோல, கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்ற ‘சரக்ஷித் மத்ரிவா அபியான்’ திட்டம் மிகக் பிரபலமானது. இந்த கவர்ச்சிகரமான திட்டத்தால் கிராமப்புற கர்ப்பிணிப் பெண்களில் 89 விழுக்காட்டினர் குழந்தை பிறப்புக்காக மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தாய்மார்களின் இறப்பு விகிதமானது வட மாநிலத்துடன் ஒப்பிடும்போது, தென் மாநிலங்களில் குறைவாகவே உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்வரை நிதி ஆயோக்கின் புள்ளிவிவரங்களின்படி, தென் மாநிலங்களில் 1 லட்சம் குழந்தை பிறப்புகளுக்கு இறப்புகளின் எண்ணிக்கை 93ஆகவும், வட மாநிலத்தில் 115ஆகவும் உள்ளது. இதே விகிதம் 2014-16 வாக்கில் முறையே 77, 93 ஆகவும் குறைக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு வரையிலான நிதி ஆயோக் புள்ளிவிவரங்களின்படி, இந்த விகிதம் ஆந்திராவில் 74, தெலங்கானாவில் 81, அசாமில் 237, உத்தரப் பிரதேசத்தில் 201, ராஜஸ்தானில் 199, தமிழ்நாட்டில் 66, பீகாரில் 165ஆக இருந்தது.

செயல்பாடுகளுக்குப் பின் இந்தியாவின் நிலைமை:

இவ்வாறு இந்தியா பாதுகாப்பான நடைமுறைகளையும் பல திட்டங்களையும் மேற்கொண்டிருந்தாலும், ஐநா சபையின் நிலையான வளர்ச்சி இலக்கிலிருந்து இந்தியா வெகுதொலைவில் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளவில் 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தாய்மார் இறப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும், நிபுணர்கள் கூறியதுபோல இந்தியாவில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். 2015ஆம் ஆண்டில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தின் எண்ணிக்கையில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் இந்தியா இருந்தது இந்தியர்கள் அனைவரையும் வருத்தமடையச் செய்யும் செய்திதான்.

இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான தீர்வுகள்:

இந்தியாவில் பெண் கல்வியறிவு விகிதம் அதிகரித்துள்ளது. இந்த விகிதம் இன்னும் அதிகரித்தால், தாய்வழி இறப்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கலாம். 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்துகொள்பவர்களின் விகிதம் கணிசமாகக் குறைந்துவிட்டாலும், நாடு முழுவதும் 27 சதவீத பெண்கள் இன்னும் நிர்ணயிக்கப்பட்ட வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

கிராம பின்னணியில் இருந்து வரும் ஏழை இளம் கர்ப்பிணி பெண்களின் தாய் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே பெண்களுக்கு 18 வயதுக்கு மேல் ஆன பின்னரே திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து பெற்றோருக்கும் வர வேண்டும். ஏனெனில் கர்ப்பத்திற்குச் சிறந்த வயதாக 20 முதல் 30 வரை இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தாய்-சேய் இறப்புகளை கணிசமாகக் குறைக்க வேண்டுமென்றால், பிரசவத்திற்கு முன்னும் பின்னும் திறமையான மருத்துவ ஊழியர்களால் முறையான மருத்துவ பராமரிப்பு வழங்கவேண்டும். மேலும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ நிபுணர்களின் மருத்துவ மேற்பார்வை மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. ஆகவே பயிற்சி பெற்ற நபர்கள் மட்டுமே பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையின்படி, இரண்டு கர்ப்பங்களுக்கு இடையிலான இடைவெளியை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதேபோல் கர்ப்ப காலத்தில் மருந்துகளின் பயன்பாடும் முறையாக இருக்கவேண்டும். சுகாதாரமற்ற சூழ்நிலையில் வீட்டிலேயே பிரசவத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அரசாங்கங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தியர்களாகிய நம்முடைய பங்கு:

நமக்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து கொடுத்திருக்கிறது. ஆகவே கர்ப்ப காலத்தில் மூட நம்பிக்கைகளை கைவிட்டும், தகுந்த விழிப்புணர்வோடு செயல்பட்டும் முறையாக அத்திட்டங்களைப் பயன்படுத்தி தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைத்து ஐநா கூறிய இலக்கை நமது நாடு எட்டுவதற்கு நம்மால் முடிந்த சிறு உதவியை நாம் செய்யலாம்..!

ABOUT THE AUTHOR

...view details