கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக இன்று (நவ.10) தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.
தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகை அடர்த்தியாக வானில் வெகு உயரத்திற்கு பரவியது. அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் இருந்து, 500 மீட்டர் சுற்றளவில் தீ விபத்துக்குள்ளான ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது.
தீவிபத்து குறித்து தகவலறிந்ததும் குடியிருப்புகளிலுள்ள மக்கள் அனைவரையும் வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில், தற்போது 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
பாபுஜி நகரிலுள்ள அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் தீ விபத்தில் தொழிற்சாலை முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தொழிற்சாலையிலுள்ள சிலிண்டர்கள் அவ்வவ்போது வெடிப்பதால், கடும் போராட்டத்துக்கு இடையே தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்தால் எழுந்த அடர்த்தியான கரும்புகையைக் கண்ட அப்பகுதி மக்கள் நாலாப்பக்கமும் ஓடினர். தீவிபத்து குறித்து தகவலறிந்தும் தலைமறைவான தொழிற்சாலையின் உரிமையாளரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.