கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவினை சில தளர்வுகளுடன் அமல்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, ஒரு மாதத்திற்கும் மேலாக செயல்படாமலிருந்த தொழில்சாலைகள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும், ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.
முன்னதாக, பல்வேறு சமூக ஆர்வலர்களும், அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு போதிய முன்னேற்பாடின்றி ஊரடங்கினை அமல்படுத்திவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தற்போது அவர்களின் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் விதமாக இரண்டு துன்பியல் சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளது.
ஒன்று, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து பத்திற்கும் மேற்பட்டோரும், பல கால்நடைகளும் பலியாகியுள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.