ஹரியானாவில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக தலைவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பாஜக உள்பட ஜனநாயக் ஜனதா கட்சியும் (ஜேஜேபி) பங்கேற்றது.
அதில் பாஜக-ஜேஜேபி கூட்டணி சார்பில் முதலமைச்சராக மீண்டும் மனோகர் லால் கட்டாரும் துணை முதலமைச்சராக ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சௌதாலாவும் தேர்வு செய்யப்பட்டனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டார்.
மேலும், அம்மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவிடம் பாஜகவை ஆட்சியமைக்க அழைக்குமாறு அவரை நேரில் சந்தித்து இது தொடர்பாக தெரிவிக்கவுள்ளோம் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளும் காங்கிரஸ் 31 தொகுதிகளும் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) 10 தொகுதிகளும் சுயேச்சை வேட்பாளர்கள் எட்டு தொகுதிகளும் மீதமுள்ள ஒரு தொகுதியில் இந்திய தேசிய லோக் தளமும் கைப்பற்றியுள்ளன.
மேலும் படிக்க: அமித் ஷாவின் கழுகுப் பார்வையில் ஹரியானா!