இந்தியாவில் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்கள் பொருளாதாரத்தில் கடும் சரிவை சந்தித்து வருவதால், பொருளாதாரம் மந்தநிலையை அடைந்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிஸ் கட்சியின் இளைஞரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதாரத்தில் இந்தியா கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது, அதை சரிகட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கண்டன முழக்கங்களை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர்.
மேலும் இந்தியாவில் கடந்த நாற்பது ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது இளைஞர்களுக்கான வேலையின்மை அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால், தற்போது பணியில் இருக்கும் நபர்களுக்கும் வேலை இழக்கும் நிலை அதிகம் உருவாகியுள்ளது என்று குற்றம்சாட்டினர்.