சுதந்திர இந்தியாவின் பொருளாதாரத்தை 1991க்கு முன், 1991க்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். 1947இல் சுதந்திரம் பெற்ற நாடு, நவீன இந்தியாவின் சிற்பி எனப்படும் நேருவின் வழிகாட்டுதலின் பேரில் முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. சோவியத் யூனியனின் அசுர வளர்ச்சியால், பொதுவுடைமை என்ற சொல் உலக அரங்கில் பெரும் குரலாக ஒலிக்கத் தொடங்கியது.
ராகுல் காந்தியின் பிறந்தநாள் வாழ்த்து இந்தியாவிலும் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்தது. நேருவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு முதல் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோது அன்றைய எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் இயக்கமே இருந்தது. அதேவேளையில், இந்தியப் பிரதமர் நேரு, தமது அரசின் பொருளாதாரக் கொள்கையாக கையிலெடுத்தது பொதுவுடைமையின் குழந்தையாகக் கருதப்படும் சோஷியலிசத்தையே.
நேரு இயல்பாகவே சோவியத் ரஷ்யா மீதும், பொதுவுடைமைக் கொள்கைகள் மீதும் தீவிரப் பற்றையும் நம்பிக்கையையும் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே அணிசேரா நாடுகள் என்ற புதிய கொள்கையை உருவாக்கிய நேரு, சோவியத் ரஷ்யாவுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார். கம்யூனிசக் கொள்கையைக் கொண்டிருந்த சீனா, இந்தியாவுடன் போரிட்டபோது, சோவியத் ரஷ்யா இந்தியாவின் பக்கம் நின்றதே - நேருவுக்கும் ரஷ்யாவுக்கும் இருந்த உறவுக்கு அத்தாட்சி.
ரஷ்ய அதிபர் புடின், அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் மன்மோகன் சிங் நேருவுக்குப் பின் அவரது மகளான இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகித்த காலத்திலும் இந்தியா சோஷியலிச கொள்கையையே பின்பற்றி வந்தது. பல்வேறு அணை பாசனத் திட்டங்கள் மூலம் இந்திய வேளாண்மை பெற்ற வளர்ச்சி, அன்றைய தொழில் உற்பத்தியின் அஸ்திவாரமான நவரத்தின நிறுவனங்கள் எனப்படும் இந்திய பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் என இந்தியாவின் ஆரம்பகால பொருளாதார அடித்தளங்கள் அனைத்தும் சோஷியலிசத்தின் குழந்தைகளே.
இவ்வாறு பயணித்துவந்த இந்தியப் பொருளாதாரத்தின் சரித்திரம் நான்கே ஆண்டுகளில் தலைகீழாகத் திரும்பும் என யாரும் - ஏன் அதன் சூத்திரதாரியான மன்மோகன்சிங்குமேகூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
இந்தியா இவ்வாறு சோஷியலிசப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தபோதுதான், 1990களின் தொடக்கத்தில் இந்தியப் பொருளாதாரம் உச்சபட்ச நெருக்கடியைச் சந்தித்தது. சோவியத் யூனியனின் பிளவு, வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த போர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் படுகொலைகளால் இந்தியாவில் நிலவிய அரசியல் ஸ்திரமற்ற நிலை என, பல்வேறு சூழல்கள் பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவில் மையம் கொள்ளக் காரணமாக அமைந்தன.
ப. சிதம்பரத்தின் பிறந்தநாள் வாழ்த்து 1980களில் ஒன்பது சதவிகிதமாக இருந்த நாட்டின் நிதிப்பற்றாக்குறை, பத்தாண்டுகளில் 13 சதவிகிதமாக அதிகரித்தது. உள்நாட்டுக் கடன் தொகையும் ஜி.டி.பி.இல் 53 சதவிகிதமாக அதிகரித்தது. வெளிநாட்டுக் கையிருப்பு துடைத்தெறியப்படும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்று, நாடே திவாலடையும் நிலையில் இருந்தது.
இத்தகைய நிலையில்தான், அன்றையப் பிரதமர் நரசிம்ம ராவ், யாரும் எதிர்பாராதவிதமாக அதிரடி முடிவை எடுத்து இந்தியப் பொருளாதார மீட்சிக்கு வித்திட்டார். ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் திட்டக்குழு துணைத் தலைவராகவும் பணிபுரிந்துள்ள மன்மோகன் சிங் என்ற பொருளாதாரப் பேராசிரியரை நிதியமைச்சராக மாற்றி புதிய பொருளாதாரக் கொள்கையை வடிவமைக்கும் பெரும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். அரசியல் பின்புலமற்ற ஒருவர் இந்திய அமைச்சரவையின் முக்கிய அந்தஸ்தை நேரடியாகப் பெற்ற வரலாறு அப்போது நிகழ்த்தப்பட்டது.
நரசிம்ம ராவுடன் மன்மோகன் சிங் யாரும் நினைத்துப் பார்க்காத வண்ணம் சீரிய வேகத்தில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார் மன்மோகன் சிங். தொழில்துறையை முடக்கிப் போட்டிருந்த லைசென்ஸ் ராஜ் முறையை ஒழித்து LPG (Liberalisation, Privatisation, Globalisation) எனப்படும்(தாராளமயமாக்கல்), அந்நிய முதலீடுகளுக்கு வழிவகை செய்து (உலகமயமாக்கல்), நஷ்டத்தில் இயங்கிய பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கினார் (தனியார்மயமாக்கல்) மன்மோகன் சிங். 40 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் பயணித்த பாதையை யாரும் நினைத்துக்கூட பார்க்காதபடி நான்கே ஆண்டுகளில் அன்றைய அரசு புரட்டிப்போட்டது.
தங்கத்தை அடமானம் வைத்து ஐ.எம்.எஃப். (International Monetary Fund) எனப்படும் சர்வதேச நிதியத்திடம் கடன் வாங்கும் அளவிற்கு நலிவடைந்திருந்த பொருளாதாரம், நான்கே ஆண்டுகளில் ஸ்திரத்தன்மைக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு மன்மோகன் சிங்கின் சீரிய வழிகாட்டுதலே காரணம் என்பதை வரலாறு மறக்காது.
1991 பொருளாதார சீர்த்திருத்தத்தில் மன்மோகனுடன் இணைந்து செயல்பட்ட சுப்பிரமணியன் சுவாமி எப்படி அவரே எதிர்பாராத வகையில் இந்திய நிதியமைச்சர் பதவி அவரைத் தேடி வந்ததோ, அதேபோல இந்தியப் பிரதமர் பதவியும் 2004ஆம் ஆண்டு அவரிடம் வந்தது. அவரின் முதல் ஐந்து ஆண்டு காலகட்டத்தில்தான் இந்தியப் பொருளாதாரம் தொடர்ச்சியாக எட்டு சதவிகித வளர்ச்சியைக் கண்டு வீறுகொண்டு எழுச்சியுற்றது.
ப. சிதம்பரத்துடன் மன்மோகன் சிங் அவர் விரும்பாவிட்டாலும் இந்திய வரலாற்றின் இரு முக்கிய பொறுப்புகள் அவரை வந்தடைந்தன. காலம் தந்த பதவிகளை அதிகாரத்தின் கருவியாகப் பார்க்காமல், முக்கியக் கடமையாக ஏற்றுக்கொண்டு சலனமற்ற கர்ம யோகியாக செயல்பட்டார் டாக்டர் மன்மோகன் சிங்.
பிரதமராகப் பதவி வகித்த இறுதி நாட்களின்போது, அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அமைதியையே பதிலாகத் தந்தவர் மன்மோகன் சிங். அதற்கும்கூட 'மௌன குரு' என்று விமர்சிக்கப்பட்டார். "யார் என்ன சொன்னாலும், வரலாறு என்னைக் கருணையுடன் எடைபோடும்" - இதுதான், பிரதமர் பதவியை விட்டுவிலகும் தருணத்தில் மன்மோகன் உதிர்த்த திருவாசகம்.
கடமையே கண்ணான மன்மோகன் சிங் "சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்" என்றார் வள்ளுவர்.
வாய்ச்சொல் வீரர்கள் பலர் மக்களை மயக்கி வெற்றி நாயகர்களாகத் தோற்றமளிப்பதுண்டு; அதன் ஆயுட்காலம் என்றும் சொற்பமே. ஏனெனில் 'சொல்லுதல் யார்க்கும் எளிது'. இந்த உலகில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் அனைத்தும் வாய்ச்சொல் வீரர்களால் அல்ல; செயல் வீரர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டவையே. இந்தியப் பொருளாதாரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை நிகழ்த்திய செயல்வீரர் மன்மோகன் சிங்கின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று. சத்தமில்லாமல் சரித்திரம் படைத்த பொருளாதார மேதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் மன்மோகன் சிங் தம்பதி