நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான கருத்துகளை வரும் 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் குழப்பத்திலும் கவலையிலும் உள்ளனர். மாம்பழச் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த தடை உத்தரவின் காரணமாக பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேற்கண்ட 27 பூச்சிக் கொல்லிகளில் 8 முதல் 10 பூச்சிக் கொல்லிகள் மாம்பழ சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த பூச்சிக்கொல்லிகள் மாம்பழச் சாகுபடிக்கு முக்கியப் பங்கு வகிப்பவை. இவை பூச்சி, பூஞ்சை போன்றவற்றிலிருந்து மரத்தை பாதுகாக்கும். இவை தடை செய்யப்பட்டால் விவசாயிகள் அதிக விலையுள்ள மருத்துகளைத் தேடிச்செல்லும் சூழல் உருவாகும். இந்தச் செலவை விவசாயிகளால் தாங்க முடியாது என நந்தை விவசாய சந்தையின் உரிமையாளர் மொஹிந்தர் பாமே தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பல்வேறு ஆண்டுகளாகவே மேற்கண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திவரும் நிலையில், இவை விளைச்சலைப் பெருக்கி அவர்களுக்கு நல்ல பலன்களை அளித்துவருகின்றன. தற்போது பயன்படுத்திவரும் பூச்சிக்கொல்லிகள் இந்தியாவிலேயேத் தயாரிக்கப்பட்டு, சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவை தடைசெய்யப்படும் பட்சத்தில் புதிய பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதில் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவர்கள். பொருளாதார ரீதியாகவும் அவை சுமையாக மாறிவிடும்.