கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பொது போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்துவருகிறது.
இதனால், அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் சிரமத்தை சந்தித்துவந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடை பயணமாகவே செல்ல தொடங்கினர். இவ்வாறு நடைபயணம் மேற்கொண்டவர்களில் 20க்கும் மேற்பட்டோர் விபத்திலும், உடல்நலம் குன்றியும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கூலி வேளை செய்துவந்த மோதிராம் என்ற வெளி மாநில தொழிலாளி, மும்பபையிலிருந்து 150 கி.மீ தூரம் உள்ள தனது கிராமத்திற்கு நடைபயணமாக செல்ல முடிவுசெய்தார். இதனையடுத்து ஏழு பேர் கொண்ட தனது குடும்பத்தினருடன் காந்திவலியில் இருந்து ஸ்ரீவர்த்தனை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த போது, மே 14 ஆம் தேதி இரவு மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள ஜைட் கிராமத்திற்கு அருகில் சென்றுக்கொண்டிந்து மோதிராம், தலைச்சுற்றி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தங்களது சொந்த ஊருக்கு நடைபயணம் மேற்கொள்ளும் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகளவில் உயிரிழந்துவரும் நிலையில், அவர்கள் பாதுகாப்பாக தங்களது ஊருக்கு செல்ல மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் பார்க்க: 'விமானப் பயணிகள் தற்போது சானிடைசர் 350 மி.லி. வரை தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதி'