கர்நாடகா மாநிலம், மங்களூரு தேரலகட்டே பகுதியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணிற்கு கத்திக்குத்து; மங்களூருவில் பரபரப்பு! - இளைஞர் வெறிச்செயல்
மங்களூரு: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கத்திக்குத்தில் படுகாயமடைந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், மங்களூரு சக்திநகர் பகுதியைச் சேர்ந்த சுசாந்த் என்பதும், படுகாயமடைந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.
அந்த இளைஞர் பலமுறை தனது காதலை இளம்பெண்ணிடம் தெரிவித்தபோது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால், ஆத்திரமடைந்து கொலை செய்யும் நோக்கில் கத்தியால் குத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிகிச்சைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவுச் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.