உத்தரப் பிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்தவர் மனிஷ் ராம். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகிவந்ததாக அறியமுடிகிறது. அவர்களது இந்த உறவை பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனையடுத்து, பெண்ணின் குடும்பத்தினரால் மனிஷுக்கு ஆபத்து ஏற்படலாம் என எண்ணிய அவரது குடும்பத்தினர், அவரை மும்பையில் சில காலம் தங்கியிருக்குமாறு அனுப்பியிருந்தனர்.
இதனிடையே, சொந்த கிராமத்திற்கு திரும்பிய மனிஷ் மீண்டும் அந்த பெண்ணை சந்திக்கத் தொடங்கியதாக தெரிகிறது. வழக்கம் போல நேற்றிரவு (செப்டம்பர் 10) அந்த பெண்ணை சந்திக்க மனிஷ் சென்றபோது, அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் மனிஷின் கைக்கால்களை கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இது குறித்து மனிஷின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தபோது, பெண்ணின் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞரை மீட்ட காவல்துறையினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
உயிரிழந்த இளைஞரின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த கொலைச் சம்பவம் குறித்த தகவலை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக விளக்கமளிக்கக் கோரி உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவு ஆணை ஒன்றை அனுப்பியுள்ளது.