ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூரில் குரியர் டெலிவரி வேலை செய்து வந்தவர் கணேஷ். இவர் நேற்று முன் தினம் (செப்.03) லாட்ஜ் ஒன்றில் தனது ஐந்து வயது மகளைத் தூக்கிலிட்டுக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சித்தூரைச் சேர்ந்த உதவிக் காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜூன், "சித்தூரில் வசிக்கும் கணேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு திவ்யாவைக் காதலித்து மணந்தார். இத்தம்பதியரின் நான்கரை வயது மகள்தான் உயிரிழந்த குழந்தை கார்த்திகா. இவர்களது திருமணம் காதல் திருமணமாக இருந்தபோதும், திவ்யா, சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக கணேஷ் - திவ்யா இடையே பல மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
இதில், திவ்யாவின் தாயும் சகோதரியும் கணேஷுக்கே ஆதரவாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (செப்.03) மாலை அவர்களுக்குள் சண்டை முற்றியதைத் தொடர்ந்து, தனது மகளுடன் கணேஷ் வீட்டை விட்டு வெளியேறி தனியார் லாட்ஜில், அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி உள்ளார். தொடர்ந்து தான் தற்கொலை செய்துகொள்ளவிருப்பது குறித்து தமிழில் பேசி காணொலி ஒன்றைப் பதிவிட்ட அவர், தனது மகளை முதலில் தூக்கிலிட்டுக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றார்.