ஹரியானா மாநிலம் பானிபேட் மாவட்டத்தில் ஒருவர் தன் மனைவியை அடித்து துன்புறுத்தி கழிவறையில் வைத்து பூட்டிவிடுவதாகவும், ஒவ்வொரு 15 - 20 நாளுக்கு ஒருமுறைதான் வெளியே விடுவதாகவும் பெண்கள் பாதுகாப்பு அலுவலர் ரஜினி குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் ரஜினி குப்தா சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் நம்ப இயலாத சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கழிவறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அந்தப்பெண்ணிற்கு உண்ண போதுமான உணவும் கொடுக்கப்படுவதில்லை.
சுமாராக ஒரு ஆண்டுக்கும் மேலாக அடைத்து வைத்து அவரது கணவர் துன்புறுத்தியுள்ளார். சுத்தமான ஆடை, சத்தான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எதுவுமே கிடைக்கப் பெறாமல் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் தான் ரஜினி குப்தா அப்பெண்ணை மீட்டுள்ளார்.
தனது இருண்மைக் காலத்தில் இருந்து வெளியேறிய அப்பெண், முதலில் சாப்பிட ஏதேனும் வேண்டும் என பாதுகாப்பு அலுவலரிடம் கேட்டுள்ளார். இந்த மீட்பு நடவடிக்கையின் போது அந்தப் பெண்ணின் கணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், தனது மனைவி உடல்நிலை சரியில்லாதவர் எனத் தெரிவித்ததோடு எதையாவது சாப்பிட்டு விட்டு வீட்டில் அடிக்கடி மலம் கழிப்பார் என்றும் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.