மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பேரணி நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
மேற்கு வங்கத்தை கெடுக்க பாஜக பல முயற்சிகள் செய்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "மாநில மக்களே மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஆளப் போகிறார்கள். மாநிலத்தின் வளங்களை கெடுத்த மத்திய அரசுக்கு மகக்கள் தகுந்த பதிலடியை தருவர்.
பண பலம், மத்திய அரசின் அமைப்புகளை வைத்துக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க அரசை கவிழ்க்க பாஜக சதி செய்துவருகிறது. நாடு இதுவரை கண்டிராத மிகவும் ஆபத்தான கட்சி பாஜக. கரோனா பெருந்தொற்றை எதிர்த்து நாடு போராடிவரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மை கெடுப்பதில் பாஜக நேரம் செலவழித்து வருகிறது.