இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் பெற்று, அதனைத் திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்து, பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார்.
சர்வதேச அமைப்புகளின் உதவியோடு மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவர சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை முயற்சி எடுத்து வந்தன. இதனிடையே, இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா தொடர்ச்சியாக வழக்கு தாக்கல் செய்துவந்தார். இந்நிலையில், விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பிரிட்டன் உச்ச நீதிமன்றம், அதனை மே 14ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மல்லையாவுக்கு அந்நாட்டில் வழங்கப்பட்ட அத்தனை சட்ட வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திவிட்டதால், விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமலாக்கத் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், "மல்லையாவை நாடு கடத்துவதற்கான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் நிறைவேறியுள்ளதால், அவர் எப்போது வேண்டுமானாலும் நாடு கடத்தப்படலாம்" என்றார். ஆனால், சரியாக எந்தத் தேதியில் நாடு கடத்தப்படுவார் என்பது குறித்து அவர் கூறவில்லை.
மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர், முதலில் சிபிஐ தான் அவரை விசாரணைக்கு எடுக்கும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மே 14ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படியானால் அந்நாட்டிலிருந்து அவர் 28 நாள்களுக்குள் நாடு கடத்தப்பட வேண்டும். ஏற்கனவே 20 நாள்கள் நிறைவுற்றுள்ள நிலையில், இன்னும் எட்டு நாள்கள் தான் இருக்கின்றன.
இதையும் படிங்க : பிரதம மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பு : 42 கோடி பயனாளிகள், 53000 கோடி பணப்பரிமாற்றம்