ஆந்திராவில் வீசிய புயல் காரணமாக கோதாவரி ஆற்றுப் படுகையில் உள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்துவருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. அங்குள்ள காவல் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், பூங்கா, விளையாட்டு மைதானம், சாலைகள் என அனைத்துப் பகுதிகளும் மழைநீரால் நிரம்பியுள்ளன.
தாழ்வான பகுதியில் வசித்துவந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில் மட்டக்குரா என்ற பகுதியில் குடிசை வீடுகள் சரிந்து விழுந்துள்ளன. இதே போல் ஜூக்கிய நகர், அஞ்சம்காட்டா, ஸ்டேட் பேங் கார்னர் போன்ற பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை அமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமில் உள்ள மண்டல அலுவலரைத் தொடர்புகொண்டு மழைநீரை அப்புறப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை செய்து தரவும் அறிவுறுத்தியுள்ளார். ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...ஏனாமில் வந்த சூறாவளியை வேடிக்கைப் பார்த்த மக்கள்; வைரலாகும் வீடியோ!