புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 287 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 287 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 306 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவுக்கு சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். புதுச்சேரியில் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி வருகின்றனர். சுகாதாரத்துறையினர் மட்டும்தான் முழுமையாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிற துறைகளில் 10 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே கரோனா பணியில் உள்ளனர். இது குறித்து, முதலமைச்சரிடம் தகவல் தெரிவித்துள்ளேன். பிற துறைகளில் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் கரோனா பணியில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.