சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில், செய்தியாளர்களை சந்தித்த மல்லாடி கிருஷ்ணராவ், “துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு, தனது துறைகளின் நடவடிக்கைகள் குறித்து பல கடிதங்கள் அனுப்பியும் பதிலில்லை. குறிப்பாக, மீனவர் ஓய்வூதியத்தை உயர்த்தும் கோப்பு பல மாதங்களாக, ராஜ் நிவாசில் தேங்கிக் கிடக்கிறது. 7,855 மீனவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவதால் 3 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதற்கான நிதியை தர முதலமைச்சர் ஒப்புதல் அளித்தும், கிரண்பேடி அனுமதி வழங்கவில்லை.
அதுமட்டுமின்றி, மீனவர் நல வாரியம், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும், கிரண்பேடி தடையாக இருக்கிறார். மாறாக புதுச்சேரியில் பெரும் தட்டுப்பாடாக இருக்கும் பால் மற்றும் உற்பத்தியே இல்லாத தேன் பண்ணை அமைக்க கிரண்பேடி கோருகிறார். மக்கள் பணத்தை மக்களுக்கு செலவிட மறுக்கும் கிரண்பேடி வந்த பிறகு, ஆளுநர் மாளிகையின் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் பணத்தை ஆளுநர் மாளிகை வீணடிக்கிறது.