வங்கதேச தலைநகரான டாக்காவில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸிடம் வங்கதேச அரசு மேற்கொண்ட விசாரணையில் மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கின் (54) பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்கதேச அரசு வலியுறுத்தியது. வங்கதேசம் அளித்த தகவலை அடிப்படையாக வைத்து தேசியப் புலனாய்வு முகமை இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தடைசெய்தது. தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதாகவும், போதனைகள் மூலம் வெவ்வேறு சமயத்தினர் இடையே பகைமை உணர்வைத் தூண்ட முயற்சி செய்ததாகவும் தேசியப் புலனாய்வு முகமை குற்றஞ்சாட்டியது.
அப்போது, வெளிநாட்டில் இருந்த அவர் இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என அஞ்சி மலேசியாவுக்குள் தஞ்சம் புகுந்த, அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் நிரந்தர வசிப்பிட குடியுரிமையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வரும் ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசிற்கு முறையான கோரிக்கைகளை இந்தியா தொடர்ந்து அனுப்பி வருகிறது.