டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, பல்வேறு தரப்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் அவரின் சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். முக்கியமாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் மிலிந்த் தியோரா, கெஜ்ரிவாலின் சாதனை குறித்து பாராட்டி பேசினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் தெரியாத தகவல் ஒன்றைப் பகிர்கிறேன். டெல்லி அரசு தனது வருவாயை 60,000 கோடி ரூபாயாக இரட்டிப்பு செய்து உபரியை கட்டுக்குள் வைத்துள்ளது. நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பதில் டெல்லி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" எனப் பதிவிட்டார்.
இதற்குப் பதிலடி கொடுத்த மற்றோரு மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், "காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டு அரைவேக்காட்டு செய்தியை பரப்புங்கள். 1997-98 காலகட்டத்தில் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, அதன் வருவாய் 4,073 ரூபாயாக இருந்தது. 2013-14 காலகட்டத்தில் 37,459 கோடி ரூபாயாக இருந்தது. 14.87 விழுக்காடு வளர்ச்சியை டெல்லி கண்டுள்ளது" என்றார்.