அண்மைக் காலமாக சினிமா துறையில் அரசியல் தலைவர்களின் பயோபிக் திரைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்கள் என்.டி.ராமராவ், வொய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பயோபிக் படங்கள் வரிசையில் நிற்கின்றன.
இந்த வரிசையில், தற்போது உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவரும் முலாயம் சிங் யாதவின் திரைப்படம் தயாராகி வருகிறது. சுவேண்டு ராஜ் கோஷ் இயக்கத்தில் மீனா சேத்தி மொண்டல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பெயர் மெயின் முலாயம் சிங் யாதவ் என பெயரிடப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் அமித் சேத்தி, மிமோ சக்ரவர்த்தி, கோவிந்த் நமதேவ், முகேஷ் திவாரி, சுப்ரியா கர்னிக், சயாஜி ஷிண்டே, சனா அமீன் ஷேக், ஜரீனா வஹாப் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
2 நிமிடங்கள் 55 வினாடிகள் ஓடக் கூடிய இத்திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்ரீ கிருஷ்ணரின் பிரசங்கத்துடன் தொடங்கும் இந்த டீசர் "நீங்கள் விரும்பியதை எதிர்த்துப் போராட முடியாவிட்டால், நீங்கள் இழந்ததற்காக அழ வேண்டாம்." என்ற வசனங்களுடன் பார்ப்பவரை பிரமிக்க வைப்பதாக உள்ளது.