தேச விடுதலை போராட்டத்தை முன்னின்று நடத்திய காந்தி இந்திய மக்களின் உடல்நலம், சுகாதாரம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். உடற்பயிற்சி, இயற்கை உணவு, தூய்மை போன்ற அம்சங்கள் நோயற்ற வாழ்க்கையை நடத்த முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. வரும்முன் காப்போம் என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் காந்தி, நோய்க்கு மருத்துவம் பார்ப்பதைவிட உடல்நலத்தின் மீது முன்கூட்டியே விழிப்புணர்வுடன் செயல்படுவதே சாமார்த்தியமானதாகக் கருதினார்.
இதன் காரணமாகவே தூய்மையை வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திவந்தார் காந்தி. குறிப்பாக பொது சுகாதாரம் குறித்த இந்திய மக்களின் அலட்சியப் போக்கை காந்தி தொடர்ச்சியாக விமர்சித்துவந்தார்.
இங்கிலாந்தில் பட்டப்படிப்பு மேற்கொள்ளப் பயணப்பட்ட காந்தி, அங்கு மனித உடற்கூறு குறித்து அடிப்படை அறிவை பயின்றுகொண்டார். மனித உடலின் இயக்கம், உணவுக்கும் உடலுக்குமான தொடர்பு ஆகியவற்றை காந்தி ஆர்வத்துடன் தெரிந்துகொண்டார். சைவ வகை உணவுகளையே விரும்பிய காந்தி, பசும்பால் அருந்துவதைக் கூட தவிர்த்துவந்தார். பின்னாளில் ஆட்டுப்பால் அருந்தத் தொடங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் பணியாற்ற பிரத்யேக மருத்துவராக நியமிக்கப்பட்டசுசீலா நாயர், ஆசிரம வாசிகளுக்கு உடல்நலம் குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை அளித்துவந்தார்.
மக்களுடன் உரையாற்றும் காந்தி 1940-42ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார் காந்தி. அந்தச் சிறைவாசத்தின்போது 'உடல்நலனுக்கான வழி' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதினார். அதில், மனித உடலின் பண்புகள், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நோய்த்தடுப்பு ஆகிய அம்சங்கள் குறித்து அப்புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
மனித உடல் நலத்திற்குப் பஞ்ச பூதங்கள்தான் அடிப்படை பங்களிப்பைத் தருவதாகக் கூறிய காந்தி இயற்கையுடன் இயைந்த வாழ்வை மனிதர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இதுவே நோயற்ற வாழ்விற்கான வழிகாட்டி எனவும் தெரிவித்தார்.
சிறந்த உடல்நலனுக்கு மன நலனும் அவசியம் என்று கூறிய காந்தி, இரவு தூக்கத்தை மனிதன் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். எளிமையான உணவே ஜீரண உறுப்புகளுக்கு ஏதுவானது என்பதால் காய்கறி, பழவகை போன்ற உணவுகளை அதிகமாகப் பயன்படுத்த வலியுறுத்தினார்.
மேலும் புகைப்பழக்கம், மது போன்று உடலுக்கு ஊறுவிளைவிக்கும் பழக்கங்கள் மனிதன் அறவே தவிர்க்க வேண்டும் என்றார் காந்தி. மனிதனுக்காகப் படைக்கப்பட்ட மிகச்சிறந்த கருவி அவனது உடல்தான் என்ற காந்தி தீய பழக்கங்களின் மூலம் அதை வீணடிக்கக் கூடாது என்பதை தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பரப்புரையாகவே போதித்துவந்தார்.