தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 10, 2019, 10:53 AM IST

ETV Bharat / bharat

காந்தி 150: இருளின் நடுவில் ஒளியாக மிளிர்ந்த காந்தி!

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை அடுத்து எழுத்தாளரும் காந்திய ஆர்வலருமான பேராசிரியர் பிரசன்னா குமார் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை இதோ...

Gandhi

தனது 12 வயதிலேயே பல மதத்தினர் மத்தியில் வளரும் சூழல் காந்திக்கு உருவாகியிருந்தது. குஜராத்தில் அவர் வசித்த பகுதியில் இந்து, இஸ்லாம், பாரசி ஆகிய சமூகங்களில் நண்பர்களைப் பெற்றிருந்தார். அதன் காரணமாக சிறுவயதிலேயே நல்லிணக்க கருத்து காந்தியின் மனதில் வேரூன்றியது.

1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் இந்து மதத்தையும், இரண்டாவது தலைவர் பாரசி சமூகத்தையும், மூன்றாவது தலைவர் இஸ்லாமிய சமூகத்தையும் சேர்ந்தவர் என்பது இயல்பாக அமைந்தது ஆச்சரியமிக்க நிகழ்வாகும்.

போர்பந்தரில் வளர்ந்த சிறுவனான காந்திக்கு, அவரது பள்ளிப்பருவம் இந்தியாவின் கலாசார பன்முகம் குறித்து கற்றுத்தந்தது. தனது தாயிடம் சபதமிட்டு இங்கிலாந்து சென்ற கல்லூரி மாணவர் காந்திக்குப் பட்டப்படிப்பு வாழ்க்கை ஒழுக்கத்தையும் தூய்மையையும் கற்றுத்தந்தது.

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் வாழ்க்கை நிறவெறிக்கான போராட்டத்தையும், அகிம்சை வழி சத்தியாகிரகத்தையும் கற்றுத்தந்தது.

ரயில் பயணத்தின்போது காந்தி

இத்தகைய முதிர்ச்சியுடன் கூடிய மனிதராகத் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி சுமார் இரண்டு ஆண்டுகள் இந்தியாவை முழுவதுமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு குழுக்களாக இந்திய மக்கள் பிரிந்திருந்து, அதன் காரணமாக தேசம் அடிமைப்பட்டிருந்தது காந்திக்கு நன்கு புரிந்தது. இந்த அநீதிக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் பணியை செய்யத் தொடங்கிய காந்தி, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான ஆயுதங்களாக சத்தியாகிரகம், அகிம்சை, அன்பு ஆகியவற்றை முன்னிறுத்தினார்.

தனது சொந்த மகனே அவரின் மீது அதிருப்தியும் கோபமும் வெளிப்படுத்தியபோது, 'உனது மனதில் நான் உனக்குத் தவறிழைத்ததாகத் தோன்றினால் உனது தந்தையை மன்னித்துவிடு' எனப் பணிவுடன் பதிலளித்தார். காந்தியின் தீவிர விமர்சகர்கள் கூட அவரின் துறவி போன்ற பக்குவமான நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டனர். காந்தி புத்தருடனும் இயேசுவுடனும் ஒப்பிடப்பட்ட நிலையில், இங்கிலாந்திலிருந்து வந்த கிறிஸ்தவ மத பரப்புரையாளர்கள் காந்தியின் ஆசிரமத்தில் இயேசு கிறிஸ்துவையே கண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மக்கள் கூட்டத்துக்கு இடையில் காந்தி

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ரோமெயின் ரோலாந்த் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் 30 கோடி மக்களின் ஆன்மாவை எழுப்பிய காந்தி, இரண்டாயிரம் ஆண்டுகளில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை அரசியல்-மயமாக்கினார் எனலாம். வளச்சுரண்டல், அதிகார வெறி, ஊழல், வன்முறை போன்ற தீமைகளை உள்ளடக்கிய இருள் சூழ்ந்த உலகின் ஒளியாக வந்தவர் காந்தி.

ABOUT THE AUTHOR

...view details