சுதந்திரப் போராட்டத்தின்போது காந்தி தலைமையில் நடைபெற்ற விடுதலை இயக்கத்திற்கு பதிலளிக்க முடியாமல் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் திகைத்தது. போராட்ட வீரர்களின் தொடர் முயற்சியின் காரணமாக வேறுவழியின்றி 1947ஆம் ஆண்டு விடுதலையும் தந்தது. அதேவேளையில் சுதந்திரத்துக்குப் பின் நடைபெற்ற மதக்கலவரம், தேசப்பிரிவினை போன்ற மோசமான நிகழ்வுகளில் சுமார் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மேலும், 14 லட்சம் பேர் தனது இருப்பிடம் விட்டு வேறு இடத்திற்கு தள்ளப்படும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
மத நல்லிணக்கத்திற்காக நீண்டகாலம் குரல் கொடுத்தவரான காந்தியடிகளை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டிவருகின்றனர். அத்துடன் கோட்சேவை தேசபக்தி கொண்ட வீரராகவும் காந்தியின் கொலையை நியாயப்படுத்தும் செயலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. காந்தி நினைத்தால் தேசப் பிரிவினையைத் தடுத்து மதக்கலவரம் நேராமல் தவிர்த்திருக்க முடியும் எனப் பலர் இன்றளவும் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்தக் கேள்விகளுக்கான பதிலை வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றின்படி ஆராய்ந்தால் அதற்கான விடை கிடைக்கலாம். 1919ஆம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரஸ் நடத்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இஸ்லாமிய சமூகத்தினரும் இணைவதற்கு காந்தி வழிவகுத்தார். கிலாபத் இயக்கத்தை முன்னின்று நடத்தி இஸ்லாமியச் சமூகத்தை விடுதலை போராட்டத்தின் மையப்பகுதியில் இணையவைத்தார். போராட்டம் வலுவடைந்து சுதந்திரம் கைகூடிய காலகட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் என்ற இரு நாட்டுக்கொள்கையை ஜின்னா கையிலெடுத்தார். சுதந்திரம் அடைந்தபின் இஸ்லாமியர்களுக்கான இடம் இந்தியாவில் மறுக்கப்படும் என்றார். தனது அரசியல் சுயலாபத்திற்காக இது போன்ற அச்ச உணர்வையும் பிரிவினை கருத்துகளையும் தொடர்ச்சியாக முன்வைத்தார் ஜின்னா.