மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.
288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் 287 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 42 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.