மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்குப் பின்னும் இந்த கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவிவருகிறது.
முதன் முறையாக தேர்தல் அரசியலில் குதித்துள்ள தாக்கரே குடும்பத்தின் வாரிசான ஆதித்யா தாக்கரேவை இரண்டரை ஆண்டுகாலம் முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிவசேனா முரண்டு பிடிக்கிறது. அதேவேலை, இது போன்ற பேச்சு வார்த்தையோ வாக்குறுதியோ எதுவும் எங்கள் தரப்பில் முன்வைக்கவில்லை என பாஜக கூறிவருகிறது. சிவசேனாவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தயக்கம் காட்டிவருகிறது.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிரா ராஜ்பவனில் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் பட்னாவிஸ்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், மக்கள் பாஜக - சேனா கூட்டணிக்கு வெற்றியைத் தந்துள்ளதாகவும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை எனவும் கூறினார்.