கோவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் பொருளாதாரம் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, அடுத்த வேலை சோற்றுக்கே திண்டாடிவருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மகாராஷ்டிராவில் குடோனில் சேமிக்க போதிய இடம் இல்லாததால் 100 குவிண்டாலுக்கு மேலான தானியங்கள் வீணாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கட்சிரோலி என்ற பகுதி, அதிகளவிலான கோதுமை, நெல் உள்ளிட்ட தானியங்களை உற்பத்தி செய்ய பெயர்பெற்ற இடமாகும். எனவே, மாநில அரசு இப்பகுதியில் இருந்துதான் அதிகளவிலான தானியங்களை கொள்முதல் செய்யும்.
அதன்படி, இந்தாண்டு ஏப்ரல் 30ஆம் தேதிவரை மகாராஷ்டிராவின் பழங்குடியின மேம்பாட்டு ஆணையம், நான்கு லட்சம் குவிண்டால் தானியங்களை கொள்முதல் செய்தது. அதில், ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 391.3 குவிண்டால் தானியங்கள் மட்டுமே ஆலைகளுக்கு அனுப்பப்பட்டன. மீதியிருக்கும் தானியங்கள் குடோன்களிலேயே வைக்கப்பட்டன.
தெற்கு கட்சிரோலி பகுதியில் மொத்தம் 25 குடோன்கள் உள்ளன. இருப்பினும், இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை பாதுகாக்க போதுமான இடமில்லை. எனவே, அதிகப்படியான தானியங்கள் குடோனுக்கு வெளியே இருக்கும் திறந்தவெளி இடத்தில் வைக்கப்படும். மழையிலிருந்து தானியங்களை பாதுகாக்க தார்பாலினை குடோன் ஊழியர்கள் பயன்படுத்துவார்கள்.
ஆனால், இந்த தார்பாலின்கள் மழையிலிருந்து தானியங்களை காப்பாற்றவில்லை. இதனால் சுமார் 100 குவிண்டாலுக்கு மேலான தானியங்கள் வீணாகியுள்ளன. ஒருபுறம் மக்கள் உணவுக்காக திண்டாடிவரும் இச்சூழ்நிலையில், முறையான பாதுகாப்பில்லாததால் தானியங்கள் வீணாக்கப்படுவதை அப்பகுதியிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதையும் படிங்க: 51 விழுக்காடு காப்பீடு சந்தை மதிப்பை இழந்த ஆயுஷ்மான் பாரத்!