இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளி கூட்டத்தின் வருகையால் விவசாய மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். பல மாநிலங்கள் பயணம்செய்து தற்போது மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தைக் குறிவைத்துள்ளது. மேலும் நாக்பூர், வர்தா மாவட்டங்களில் பல பகுதிகளைச் சேதப்படுத்தியுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் ரவி போஸ்லே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாக்பூர் மாவட்டத்தில் ஃபெட்ரி, கான்கவுன், கட்டோல் பகுதி, வர்தா மாவட்டத்தின் அஸ்தி தாலுகா போன்ற இடங்களில் இருக்கும் பண்ணைப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கடந்த மே 23ஆம் தேதி இரவு புகுந்துள்ளது. தற்போது கட்டோல் பகுதியில் ஆரஞ்சு பயிர் பூ பூக்கும் சீசனாகும்.
தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால் கத்திரிக்காய், வெண்டைக்காய், ஆரஞ்சு பழ பயிர்களைத் தவிர நல்வாய்ப்பாக வேறு எந்தப் பெரிய பயிரும் வயல்களில் போடவில்லை.
இந்தப் பாலைவன வெட்டுக்கிளி கூட்டத்தால் பெரியளவில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றாலும் சில ஆரஞ்சு பழத்தோட்டங்களும், காய்கறிகள் பயிரிடப்பட்ட வயல்களும் சேதமடைந்துள்ளன.