இந்தியாவில் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் இதுவரை நான்காயிரத்து 128 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அம்மாநில அரசு கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்துவருவதாக மாநில எதிர்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "கரோனா தொடர்பான மரணங்களை மாநில அரசு அறிவிக்கும் முன்னர் அவை மும்பை மாநகராட்சிக் குழுவின் மேற்பார்வைக்கு வைக்கப்படும். இந்தக் குழுவின் புள்ளிவிவரப்படி, மும்பை நகரில் மட்டும் இதுவரை 451-க்கும் மேற்பட்ட மரணங்களை மாநில அரசு அறிவிக்கவில்லை. மேலும், மாநிலம் முழுவதும் சுமார் 950 மரணங்களை அரசு மறைத்துவருகிறது" எனக் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.