மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின்னர் மகா விகாஷ் அகாதி (Maha Vikas Aghadi) கூட்டணி அமைத்து சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி பொறுப்புக்கு வந்தார். இந்தக் கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நவம்பர் 28ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது. உத்தவ் பதவியேற்று 32 நாட்கள் கழிந்துள்ள நிலையில், அவரின் அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு தலா இரண்டு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (டிச30) நடக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கூடுதலாக 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. துணை முதலமைச்சர் பதவி மீது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் ஒரு கண் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.