உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையிலும், உயிரிழப்பு எண்ணிக்கையாலும் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
கரோனா பாதிப்பு:
கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 ஆயிரத்து 234 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 99 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை கரோனாவுக்கு 48 ஆயிரத்து 801 பேர் உயிரிழந்தனர்.
மேலும், கரோனா பாதிப்பிலிருந்து நேற்று(டிச.21) 6 ஆயிரத்து 53 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 89 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது.
ஆரம்பக் காலத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அம்மாநிலத்தில் கரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் புதியவகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
மகாராஷ்டிராவில் ஊரடங்கு:
இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா முழுவதும் நாளை (டிச.23) முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், இதைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.