மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் ஜாதவ் வாடி பகுதியில் நவ்பாரத் உரக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் உரிமையாளர் விவசாயத்திற்கு தேவையான யூரியாவை தனது குடோனில் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதற்காக புகார்கள் எழுந்தன.
இந்தப் புகாரினை விசாரிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் தாதா பூஷ், தனது பணியாளர் ஒருவரை விவசாயிபோல் அந்தக் கடைக்கு அனுப்பி விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் கடையின் உரிமையாளர் பதுக்கலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
யூரியாவை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரெய்டு விட்ட அமைச்சர் இதையடுத்து அமைச்சரே நேரடியாக விவசாயி போல் கடைக்கு சென்று 10 பைகள் யூரியா வேண்டும் என கடையின் உரிமையாளரை அணுகியுள்ளார். அதற்கு கடையின் உரிமையாளர் யூரியா மொத்தமும் விற்பனையாகிவிட்டதாக பதிலளித்துள்ளார்.
இதனிடையே அமைச்சர் ரெய்டுக்கு வந்த சம்பவம் அறிந்து வேளாண் அலுவலர்கள் கடைக்கு வந்தனர். அதனைத்தொடர்ந்து கடையின் இருப்பு நிலை ஆய்வு செய்யப்பட்டு, குடோனில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த ரெய்டில், ஆயிரத்து 386 பைகள் யூரியா கையிருப்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் மீது மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட அமைச்சர், இதனைக் கண்டுகொள்ளாமல் விட்ட வேளாண் துறையின் தரக் கட்டுப்பாட்டு அலுவலரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்தார்.
கரோனா வைரஸ் பரவல் காலத்திலும் விவசாயி கெட் அப்பில் ரெய்டு நடத்திய அமைச்சரின் செயல், மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:யெஸ் வங்கி நிறுவனர் வீட்டில் ரெய்டு!