மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் என இரு கூட்டணிக்கும் இந்தத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு சட்டப்பேரவை அமைந்ததால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பின் இறுதியில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது. சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இருப்பினும் அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உறுப்பினராக இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் அமைச்சர் அல்லது முதலமைச்சராகப் பதவியேற்க ஆறு மாதங்களுக்குள் மேலவை அல்லது கீழவை என ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். அதன்படி உத்தவ் தாக்கரேவுக்கான காலக்கெடு மே 26ஆம் தேதிவரை ஆகும். அதற்குள் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும்.
கோவிட்-19 பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. இதனால் உத்தவ் தாக்கரேவை சட்டமேலவை உறுப்பினராக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.