உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிய அப்பெண், 15 நாள்கள் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி உயிரிழந்தார்.
அவருக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் காவல் துறையும், மாநில பாஜக அரசும் நடந்துகொண்டவிதம் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்ல கடந்த 2ஆம் தேதியன்று ஹத்ராஸுக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரைத் தடுத்த உ.பி. காவல் துறையினர் கீழே தள்ளி தரக்குறைவாக நடத்தினர்.
இந்தச் சம்பவம் நடந்த மறுநாள் தனது சகோதரர் ராகுல் காந்தியை அழைத்துக்கொண்டு பிரியங்கா காந்தி மீண்டும் ஹத்ராஸ் மாவட்டத்திற்குள் காவல் துறை அடக்குமுறைகளைத் தாண்டி நுழைந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க அவரது கிராமத்தைச் சென்றடைந்த பிரியங்கா காந்தியை அங்கிருந்த ஆண் காவலர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஒரு காவலர் பிரியங்கா காந்தியின் உடையை இழுத்துப் பிடித்து, அநாகரிகமாக நடந்துகொண்டார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.