மார்ச் 23ஆம் தேதி இந்தியா முழுவதும் கரோனா நெருக்கடியில் கவனம் செலுத்திவந்த வேளையில், மத்திய பிரதேச முதலமைச்சராக சிவராஜ் சிங் சௌகான் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் லால்ஜி டாண்டன் தலைமையில் ராஜ் பவன் வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள், காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்திருந்த வேளையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் சிவராஜ். 15 மாத இடைவெளிக்கு பின் நான்காவது முறையாக சிவராஜ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சட்டபேரவை தேர்தலில் தோல்வியை தழுவிய பாஜகவின் கைகள் தற்போது மத்திய பிரதேசத்தில் ஓங்கியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு காரணம், மார்ச் 10ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியை விட்டு விலகியதே ஆகும். அவரைத் தொடர்ந்து 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகினர். பாஜக தந்த நெருக்கடியால் காங்கிரசின் முக்கிய எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு பறந்து சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச ஆளுநர், மார்ச் 16ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவை அவைத் தலைவருக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவைத் தலைவர் என் பி பிரஜபதி, நம்பிக்கை வாக்கெடுப்பு காலதாமதம் செய்ததால், அவைத் தலைவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது பாஜக.
மார்ச் 19ஆம் தேதி நீதிபதிகள் டி ஒய் சந்திரசுத், ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி அவைத் தலைவருக்கு உத்தரவிட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே முதலமைச்சர் கமல்நாத் பதவியை ராஜிநாமா செய்தார். 22 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால், கமல்நாத் தலைமையிலானா காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
மத்திய பிரதேசத்தில் மொத்த 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 114 இடங்களை பிடித்திருந்தது (பிஎஸ்பி, எஸ்பி மற்றும் சுயேட்சை கட்சிகளின் 7 தொகுதிகள் ஆதரவோடு). பாஜக 107 இடங்களை பிடித்திருந்தது. 22 எம்எல்ஏக்களின் பதவி விலகலால் சட்டபேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 208ஆக குறைந்தது. இதனால் ஆட்சி அமைக்க 104 இடங்கள் இருந்தால் போதும், எனவே பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது.
கட்சித் தாவல் தடை சட்டத்தை கடந்து செல்ல மத்திய பிரதேச அரசியல் புதிய முறையை வகுத்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10ஆவது அட்டவணை (கட்சித் தாவல் தடை சட்டம்), 1985ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 52ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் போது அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ‘ஆயே ராம் காயே ராம்’ என குறிப்பிடுகின்றனர். அதற்கு காரணம், ஹரியான எம்எல்ஏ காயே ராம் ஒரே நாளில் மூன்று கட்சிக்கு தாவியதே ஆகும்.