தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தங்கக் கடத்தல் வழக்கு... முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து ரகசிய அழைப்பு' -  முதலமைச்சர் செயலர் திடீர் பதவி நீக்கம் - கடத்தல் தங்கத்தில் தொடர்புடைய ஐடி ஊழியர் ஸ்வப்னா

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிபவருக்கு தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகத் தகவல் பரவிய‌ நிலையில், முதலமைச்சரின் செயலர் சிவசங்கர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

kerala
kerala

By

Published : Jul 7, 2020, 2:47 PM IST

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்துக்கு வந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சுங்கத் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 30 கிலோ தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு தூதரகத்தில் முன்பு பணியாற்றிய பிஆர்ஒ ஸரித் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தலில் ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்தில் முன்பு பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர் கடத்தல் தங்கத்தை கேரளாவிற்குக் கொண்டுவர போலியான ஆவணங்களைத் தயார் செய்ததும் கண்டறியப்பட்டது.

தற்போது, ஸ்வப்னா கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். தூதரகத்தில் பணியாற்றியவருக்கு இந்தப் பதவி எப்படி வந்தது என்று விசாரிக்கையில், கேரளா முதலமைச்சரின் செயலரான சிவசங்கரின் பரிந்துரையின் பேரில் கிடைத்தது உறுதியானது. சிவசங்கர் தகவல் தொழில்நுட்பத் துறை செயலராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். இதைத் தொடர்ந்து, ஸ்வப்னாவின் வீட்டில் சுங்கத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா முழுவதும் இச்சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்ப, பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வியெழுப்பினர். இதுதொடர்பாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன், விசாரணையை நிறுத்துமாறு ஸ்வப்னா சார்பாக முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து சுங்க அலுவலகத்திற்கு ரகசிய அழைப்பு ஒன்று சென்றுள்ளது என்றும், முதலமைச்சருக்கு நெருக்கமான ஒருவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், இந்தக் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்றும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நபரும் முதலமைச்சர் அலுவலகத்தில் செயல்பட வாய்ப்பில்லை எனவும் விளக்கமளித்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனின் செயலர் சிவசங்கர் அதிரடியாகப் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மீர் முகமது என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் தொடர்ந்து ஐடி துறையின் செயலராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் வழக்கில் பல முக்கியத் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details