கே.ஐ.எம்.எஸ் இதய மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை மையத்தில் தீவிர நுரையீரல் நோயால் அவதிப்பட்டுவந்த ஒருவருக்கு, ஜீவாந்தன் என்ற உடல் உறுப்பு தானம் திட்டத்தின் கீழ் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், புனே தனியார் மருத்துவமனையில் இளைஞர் ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டிருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, புனேவின் மண்டல உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம் ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவருக்கு அவரது நுரையீரலைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தெலங்கானா ஜீவாந்தம் திட்டத்தின் பொறுப்பாளர் டாக்டர் சுவர்ணலதா, புனேவின் மண்டல உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி கோகலேவிடம் கலந்தாலோசித்தார். அதனைத் தொடர்ந்து தடைகளில்லாமல் 560கி.மீ அந்த நுரையீரலைக் கொண்டு வரத் திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, போக்குவரத்து அலுவலர்கள், விமான நிலையத்தின் அலுவலர்கள் என அனைவரிடமும் முறையாகக் கலந்தாலோசித்து, புனேவிலிருந்து ஹைதராபாத்துக்கு நுரையீரலை பாதுகாப்பாகக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.