பொதுவாக ஊர்கூடி, விருந்தளித்து, நண்பர்கள் சொந்தங்கள் வாழ்த்த திருமணங்கள் நடந்தேறும் உலகை, கூட்டம் தவிர்த்து தனி மனித இடைவேளை பேணி திருமணங்கள் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியுள்ளது கரோனா.
கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து வேறு வேறு ஊர்களைச் சேர்ந்த பல காதலர்கள் பிரிந்து வாழ்ந்தும், நடைபெறவிருந்த பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டும் வரும் நிலையில், இணைய உலகின் அம்சங்களை சாதகமாக்கி, தனி மனித இடைவெளியையும் பொறுப்புணர்வோடு கடைபிடித்து, தங்கள் காதல் திருமணத்தை இந்த உக்ரைனிய ஜோடி வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது.
உக்ரைன் நாட்டில் நடைபெறும் முதல் இணையதள திருமணமான இந்தத் திருமணத்திற்கு, தங்களது விருந்தினர்களுக்கு இனையத்தின் மூலமாகவே இந்த ஜோடி அழைப்பு விடுத்துள்ளது. மொத்தம் 70 விருந்தினர்கள் இந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், அனைவரும் காணொளிக் காட்சி வழியாக மணமக்களை வாழ்த்தி, தங்களது பரிசுகளை ஒவ்வொருவரும் தனித்தனியாக காதல் ஜோடியின் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அனைத்து கிறிஸ்துவத் திருமணங்களையும் போல் அழகான திருமண ஆடைகள், ரெஸ்டாரண்டின் அலங்கரிக்கப்பட்ட ஹால்கள், சில கேமராக்கள், ஒரு பெரும் திரை ஆகியவற்றுடன் எந்த விருந்தினரும் நேரடியாக பங்கு பெறாமல் எந்தத் தடையுமின்றி அழகாக திருமணம் நடந்தேறியுள்ளது.