நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நேற்று விவாதத்தில் பங்கேற்ற திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, "வெங்காயத்தின் விலை மூன்று மடங்க அதிகரித்துள்ளது. மத்திய வர்க்கத்தினரால் வெங்காயங்ளை வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் இது எதிரொலித்துள்ளது. சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
பருவ மழை அதிகமாக பெய்ததாலும் வெங்காய பதுக்கலாலும்தான் வெங்காயத்தின் விலை உயர்ந்ததாக வணிக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய முறையில் வெங்காயத்தை சேகரித்து வைத்ததாலும் அது பாழாகியுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதித்தபோதிலும், அதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுபடுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியவிரும்புகிறேன்" என பேசினார்.
ஆன்லைன் விற்பனை குறித்து பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், "ஆன்லைன் விற்பனை இந்தியாவில் தொடங்கப்பட்டதிலிருந்து 4.5 கோடி வணிகர்கள் தங்கள் கடைகளை மூடியுள்ளனர். அவர்களின் எதிர்காலம் இதன் மூலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு அறையிலிருந்துகொண்டு பொருள்களை மக்களிடையே விற்கின்றன. இது தொடர்ந்தால், வணிகர்கள் எப்படி இந்தியாவில் வாழ முடியும்.
நடப்பாண்டில் பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு 3,835 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 6000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அரசுக்கு இதனால் எந்த லாபமும் கிடைக்கவில்லை. ஆன்லைன் விற்பனையால் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. விற்பனை செய்யப்படும் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. விற்கப்படும் பொருள்களின் தரம் குறித்து புகார் அளிக்கப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை!